இலவச சிலிண்டர் முதல் இலவச பயணம் வரை: சட்டசபையில் முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்புகள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு நடைபெற்ற கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், உயர்கல்வி, பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

ஆண்டுக்கு 3 இலவச எரிவாயு சிலிண்டர்கள்

தற்போதைய போர் சூழல் காரணமாக எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டார். இதையடுத்து, அன்னப்பூரணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக ஆண்டுக்கு 3 எரிவாயு சிலிண்டர்களை இலவசமாக வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டம் 2027 பொங்கல் பண்டிகை முதல் நடைமுறைக்கு வரும். இதற்காக தமிழக அரசு ஆண்டுதோறும் ரூ.4,000 கோடி ஒதுக்க திட்டமிட்டுள்ளது. இலவச சிலிண்டருக்கான தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பரந்தூர் விமான நிலைய திட்டம்

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிராக நீண்ட காலமாக போராடி வரும் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் தனது ஆதரவு தொடரும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்தார். விவசாய நிலங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில் மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஏற்கனவே தெரிவித்திருந்ததாகவும் அவர் கூறினார்.

விக்கிரவாண்டியில் 2024 அக்டோபரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலேயே பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக விஜய் நினைவுகூர்ந்தார். புதிய விமான நிலையத்திற்காக மாற்று இடங்களை அதிகாரிகள் மற்றும் துறை வல்லுநர்களுடன் ஆலோசித்து தேர்வு செய்துள்ளதாகவும், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் என்றும் அறிவித்தார். மேலும், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மகளிருக்கான கட்டணமில்லா அரசு பேருந்து பயணத் திட்டம்

மாநகரங்கள் மற்றும் நகரங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் வசதி வழங்கப்படும். இந்தத் திட்டத்தை பெறுவதற்கு பெண்களுக்கு எந்தவித வருமான உச்சவரம்பும் நிர்ணயிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார். மகளிருக்கான கட்டணமில்லா அரசு பேருந்து பயணத் திட்டம் அக்டோபர் 2 முதல் விரிவுபடுத்தப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
RELATED ARTICLES

Most Popular