தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. இதற்காக முதல் கட்டமாக 1,28,499 மோதிரங்களை கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
முதல் கட்டமாக 1.28 லட்சம் மோதிரங்கள்
தமிழக அரசின் மருத்துவ சேவைகள் கழகம், முதல் கட்டமாக 1,28,499 தங்க மோதிரங்களை வழங்குவதற்கான பணியாணைகளை Joyalukkas மற்றும் Kalyan Jewellers நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.
இந்த முதல் கட்ட மோதிரங்கள் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த தகுதியான குழந்தைகளுக்காக வழங்கப்பட உள்ளன.
மொத்த மோதிரங்களில் 70 சதவீதத்தை ஜாய்ஆலுக்காஸ் நிறுவனமும், 30 சதவீதத்தை கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனமும் வழங்குகின்றன. அதன்படி, முதல் நிறுவனத்திற்கு 89,949 மோதிரங்களும், இரண்டாவது நிறுவனத்திற்கு 38,550 மோதிரங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
முதல் கட்டத்துக்கு ரூ.220 கோடி
ஒரு மோதிரம் ஒரு கிராம் எடையுடைய 22 காரட் தங்கத்தால் தயாரிக்கப்படுகிறது. தற்போதைய தங்க விலையை அடிப்படையாகக் கொண்டால் ஒரு மோதிரத்தின் மதிப்பு சுமார் ரூ.14,950 ஆக உள்ளது.
1,28,499 மோதிரங்களின் மொத்த எடை சுமார் 128.5 கிலோவாக இருக்கும். முதல் கட்ட கொள்முதலுக்கான செலவு சுமார் ரூ.220 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் தங்கத்தின் சந்தை விலை மாறுபடுவதால் இறுதி செலவும் மாறக்கூடும். தங்கம் வாங்குவதற்கான தொகையை அன்றைய சந்தை விலைக்கு ஏற்ப அரசு செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு
இந்தத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
ஒரு ஆண்டில் மொத்தம் 4,41,667 ஒரு கிராம் தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன. அதாவது, முதல் நான்கு மாதங்களுக்கான 1.28 லட்சம் மோதிரங்களுக்கு சுமார் ரூ.220 கோடி செலவிடப்படும் நிலையில், ஆண்டு முழுவதற்கான திட்டச் செலவு ரூ.755.83 கோடியாக இருக்கும்.
செப்டம்பர் 15 முதல் திட்டம்
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நாள் முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளாகும்.
முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய் தேர்தலுக்கு முன்பு அறிவித்த வாக்குறுதிகளில் இந்தத் திட்டமும் இடம்பெற்றிருந்தது. அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவிப்பதும், அரசு மருத்துவ சேவைகள் மீது மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதும் திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2026 ஜூன் 22-ம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.
யாரெல்லாம் பயன் பெறலாம்?
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இத்திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்படுகின்றனர். அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு, குழந்தையின் பிறப்பு வரிசை அல்லது பாலினத்தைப் பொருட்படுத்தாமல் இந்தப் பயன் வழங்கப்படும்.
தமிழகத்தில் வசிப்பதற்கான ஆதாரமாக குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை, அஞ்சல் துறையின் முகவரி அட்டை அல்லது இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களில் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 4.2 லட்சம் பிரசவங்கள்
தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 7.8 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. இதில் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு சுகாதார நிலையங்களில் சுமார் 4.2 லட்சம் பிரசவங்கள் நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, மொத்த பிரசவங்களில் சுமார் 53 சதவீதம் அரசு மருத்துவ வசதிகள் மூலம் நடைபெறுகின்றன. அரசு மருத்துவமனைகளில் ஒரு பிரசவத்திற்காக குடும்பங்கள் நேரடியாக செலவிடும் சராசரி தொகை ரூ.1,364 ஆகவும், தனியார் மருத்துவமனைகளில் அது ரூ.63,473 ஆகவும் இருப்பதாக அரசு தரவுகள் குறிப்பிடுகின்றன.
தங்க மோதிரம் வழங்கும் நிறுவனங்கள்
மோதிரங்களை கொள்முதல் செய்வதற்கான போட்டி ஒப்பந்தத்தில் பல நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் ஜாய்ஆலுக்காஸ் நிறுவனம், ஒரு கிராம் தங்கத்தின் சந்தை விலைக்கு மேலாக தயாரிப்பு மற்றும் சேவை உள்ளிட்ட கட்டணங்களுக்காக வெறும் 1 பைசா கூடுதல் கட்டணத்தை குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
