ரெயில் பயணம் பொதுவாக சிக்கனமான போக்குவரத்து முறையாகக் கருதப்படுகிறது. ஆனால் ஒரு ரெயில் ஒரு கிலோமீட்டர் தூரத்தை கடக்க எவ்வளவு எரிபொருள் அல்லது மின்சாரம் தேவைப்படும் என்பது அதன் வகை, எடை, பெட்டிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட காரணங்களை பொறுத்து மாறுபடுகிறது.
ரெயிலுக்கு எவ்வளவு டீசல்?
டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படும் 12 பெட்டிகள் கொண்ட ஒரு சாதாரண பயணிகள் ரெயில், ஒரு கிலோமீட்டர் செல்ல சுமார் 6 லிட்டர் டீசல் வரை பயன்படுத்தப்படுகிறது. ஒரு லிட்டர் டீசலில் அந்த ரெயில் சுமார் 170 மீட்டர் மட்டுமே பயணிக்க முடியும்.
விரைவு ரெயில்களின் டீசல் பயன்பாடு அவற்றின் பெட்டிகளின் எண்ணிக்கை மற்றும் எடையைப் பொறுத்து மாறுபடும். 12 பெட்டிகள் கொண்ட ஒரு விரைவு ரெயில், ஒரு கிலோமீட்டர் பயணிக்க சுமார் 4.5 லிட்டர் டீசல் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, ஒரு லிட்டர் டீசலில் சுமார் 220 மீட்டர் தூரம் செல்ல முடியும்.
மின்சார ரெயிலுக்கு எவ்வளவு செலவு?
இந்திய ரெயில்வேயில் மின்சார இன்ஜின்களின் பயன்பாடு தற்போது அதிகரித்து வருகிறது. மின்சார ரெயில்களை இயக்குவதற்கு ஒரு கிலோமீட்டருக்கு சுமார் 20 யூனிட் மின்சாரம் தேவைப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆஜ்மீர் ரெயில்வே டிவிஷனில் ரெயில்களுக்கு வழங்கப்பட்ட மின்சாரத்தின் ஒரு யூனிட் விலை ரூ.6.50 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அந்த விலையை அடிப்படையாகக் கொண்டால், ஒரு ரெயில் ஒரு கிலோமீட்டர் செல்ல சுமார் ரூ.130 செலவாகும்.
தற்போதைய மின்சாரக் கட்டணத்தைப் பொறுத்து இந்தத் தொகை சற்று அதிகமாக இருக்கலாம். எனவே, தோராயமாக ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு ரயிலை இயக்க ரூ.150 வரை மின்சாரச் செலவு ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது.
