கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வி.எஸ்.பாபுவை எதிர்த்து முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். இந்த தேர்தல் முடிவில் வி.எஸ்.பாபு சுமார் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தேர்தல் முடிவைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவற்றை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பில் நீதிமன்றத்தை அணுகினர். நீதிமன்ற உத்தரவின் பேரில் கொளத்தூர் தொகுதியில் 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் ஆய்வு கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கியது.
ஆய்வுக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில், மாதிரி வாக்குப்பதிவு நடத்தி அதன் முடிவுகளை விவிபேட் சீட்டுகளுடன் ஒப்பிட்டபோது எந்த முரண்பாடும் கண்டறியப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவின்படி, சில வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளையும் விவிபேட் ஒப்புகை சீட்டுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது, 6 வாக்குச்சாவடிகளில் பல்வேறு முரண்பாடுகள் கண்டறியப்பட்டதாக மு.க.ஸ்டாலின் தரப்பு கூறியுள்ளது.
மேலும், சில வாக்குப்பதிவு எந்திரங்களில் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் தொடர்பான கோளாறுகள் இருந்ததாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் பிரதிநிதி புகார் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் எந்திரங்கள் தொடர்பான புகார்களை வெளிப்படையாக விசாரிப்பதற்கான நடைமுறையை உருவாக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. அத்துடன், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியை செல்லாது என அறிவித்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
