மிலாது நபி திருநாளை முன்னிட்டு முதலைமச்சர் விஜய் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதலைமச்சர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி
இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த இந்நன்னாளில் என் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய மிலாது நபி நல்வாழ்த்துகள்!
மனிதகுலத்தின் மீது அன்பையும், ஏழை எளியோரின் மீது இரக்கத்தையும், அனைவரிடத்திலும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பேண வேண்டும் என இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் போதித்த உயரிய நெறிகளைப் பின்பற்றி, உலகில் அன்பையும் நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்வோம்! இந்த நன்னாளில், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், நலமும், வளமும் நிறைந்திடட்டும்!
விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி
நபிகள் நாயகம் பிறந்த நாளான இந்த நன்னாளில் இசுலாமிய சொந்தங்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமுவந்த ‘மிலாது நபி நாள்’ வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மனிதகுலத்தை நல்வழிப்படுத்தி மனித நேயத்தைச் செழிக்கச் செய்த மகத்தான பேராளுமை மிக்கவர் நபிகள் நாயகம்.
மனிதகுலத்தில் நிலவிய பாகுபாடுகள், வன்முறைகள், உழைப்புச் சுரண்டல் போன்ற சமூகத் தீமைகளை எதிர்த்துப் போராடியவர். இறைநம்பிக்கையும் அதனடிப்படையிலான இறையச்சமும் தனி மனித நல்லொழுக்க மேம்பாட்டுக்கு அடிப்படைகளாக அமையும் என்கிற நம்பிக்கையோடு போதனைகளை அருளியவர். பேரன்பும் பெருங்கருணையும் தாம் மக்களிடையே நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் வளர்க்குமென்கிற உயரிய மாண்புகளைப் பரப்பியவர்.
அத்தகைய மாமனிதர் நபிகள் பெருமானின் நன்னெறிகளைப் பரப்பவும் அதன் சகோதரத்துவத்தை உலக மாந்தரிடையே நிலைபெற செய்யவும் இந்நாளில் உறுதியேற்போம்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து
இஸ்லாமியர்களால் உயிரினும் மேலாக நேசிக்கப்படும் இறைத்தூதர் முகமது நபியின் பிறந்த நாளை மிலாது நபி திருநாளாகக் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆறு வயதில் தாயை இழந்த நபிகள் தமது இளம் வயதில் வறுமையின் கொடுமைகளை அனுபவித்தார். நாற்பது வயதில் இறைத்தூதுகளை பெறத் தொடங்கிய அவர், அடுத்த 23 ஆண்டுகளுக்கு அற்புதங்களை நிகழ்த்தினார். வறுமையிலும் அவர் செம்மையாகவும், தூய்மையாகவும், அழுக்காறு இன்றியும், உண்மை மட்டுமே உரைத்தும், எவரிடத்தும் கோபம் கொள்ளாமலும், பேராசையின்றியும், அன்பு செலுத்தியும் வாழ்ந்தார். அதனால் தான் அவரது வாழ்க்கை வரலாறாக மாறியிருக்கிறது. உலகில் உள்ள அனைவரும் பின்பற்றத்தக்க உன்னதமான பாடமாக இறைதூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கைப் போற்றப்படுகிறது.
போதனையும், பின்பற்றலும் இணைந்து செல்வது மிகவும் அரிது. ஆனால், தாம் கடைபிடித்ததை மட்டுமே போதனையாக வழங்கினார் நபிகள் நாயகம். இறை நம்பிக்கை, பாவமன்னிப்பு கோருதல், தொழுதல், உதவி புரிதல், பிறரை ஏமாற்றாமல் இருத்தல் மற்றும் செல்வத்தில் நாட்டம் இல்லாமல் இருத்தல், கற்பு மற்றும் பெண் சிசுவதைக்குத் தடை என்ற வழியில் பயணித்த நபிகள் நாயகத்தின் வாழ்க்கை என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமே போற்றத்தக்க பாடம் ஆகும்.
நபிகள் நாயகம் கற்பித்த உண்மையையும், ஒழுக்கத்தையும் அனைவரும் கடைபிடிக்க வேண்டும். உலகில் அமைதி, வளம், மனநிறைவு, மகிழ்ச்சி, ஒற்றுமை, சகோதரத்துவம், பிறருக்கு உதவும் குணம், கொடை ஆகியவையும் நிறைய வேண்டும் என்று கூறி, மீண்டும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி
இஸ்லாமிய சொந்தங்களுக்கு மிலாதுன் நபி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் புனித நாளில், மத நல்லிணக்கமும் மனிதநேயமும் தழைத்தோங்கவும், அனைவரது வாழ்விலும் அமைதி, மகிழ்ச்சி, வளம் நிறைந்திடவும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
