தமிழகத்தில் மூடப்படும் கோ-ஆப்டெக்ஸ் கடைகள் : என்ன காரணம்?

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் 10 விற்பனையகங்கள் மூடப்படுவது தொடர்பாக எழுந்த விவாதங்களுக்கு அமைச்சர் விஜய் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை நஷ்டத்தில் செயல்பட்ட கடைகளே மூடப்படுவதாகவும், அதே நேரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் புதிய கடைகள் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் செயல்பட்டு வந்த கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்களில் 10 கடைகளை மூடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. சில கடைகளில் விற்பனை நிறுத்தப்பட்டு, சில இடங்களில் கடைகளை காலி செய்யும் பணிகள் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின.

கோ-ஆப்டெக்ஸ் கடைகள் மூடப்படுவது கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடும் என்ற கவலையும் எழுந்தது. குறிப்பாக, இந்த விற்பனையகங்கள் கைத்தறி பொருட்களை சந்தைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதால், அவற்றை மூடக்கூடாது என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பாமக எம்.எல்.ஏ. கணேஷ்குமார் இந்த விவகாரத்தை எழுப்பினார். கோ-ஆப்டெக்ஸின் 10 விற்பனையகங்கள் மூடப்படுவதால் கைத்தறி நெசவாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், அந்த கடைகளை தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் விஜய் பாலாஜி, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் செயல்பாடு குறித்த விவரங்களை விளக்கினார். கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் கீழ் மொத்தம் 146 விற்பனையகங்கள் உள்ளது. இதில் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை நஷ்டத்தில் இயங்கி வந்த 10 விற்பனையகங்களை மட்டுமே தற்போது மூடப்படுவதாக கூறினார். மேலும், மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள 3 பகுதிகளில் புதிய கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
RELATED ARTICLES

Most Popular