தமிழகத்தில் சைபர் குற்றங்கள் மற்றும் இணையவழி மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், தேசிய அளவில் சைபர் குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 7-வது இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. நிதி இழப்பில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது.
2026-ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 31-ம் தேதி வரை தமிழகத்தில் மட்டும் 88,385 சைபர் குற்ற புகார்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை, இணையவழி மோசடிகள் மாநிலத்தில் அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது.
தேசிய அளவில் சைபர் குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு சிறப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் மேற்கு வங்கம் முதலிடத்திலும், உத்தரபிரதேசம் 2-வது இடத்திலும், மராட்டியம் 3-வது இடத்திலும் உள்ளன. இந்த வரிசையில் தமிழகம் 7-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த விவரங்கள், இம்மாதம் நடைபெறவுள்ள பிரகதி கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
சைபர் மோசடிகளால் பணத்தை இழக்கும் மாநிலங்களின் பட்டியலிலும் தமிழகம் கவலைக்கிடமான இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளது. கர்நாடகா 2-வது இடத்திலும், உத்தரபிரதேசம் 3-வது இடத்திலும் உள்ள நிலையில், தமிழகம் 4-வது இடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
