தமிழக மக்களே உஷார்! அதிகரிக்கும் பன்றிக்காய்ச்சல்.. சுகாதாரத்துறை முக்கிய எச்சரிக்கை

தமிழகத்தில் பருவமழை தொடங்குவதற்கு முன்பே H1N1 வகை பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி மாதத்தில் 19 பேராக இருந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 339 ஆக உயர்ந்துள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் மட்டுமின்றி டெல்லி, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பருவகால காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. H1N1 என்பது இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸால் ஏற்படும் சுவாசத் தொற்றாகும். பாதிக்கப்பட்ட நபர் இருமும்போது, தும்மும்போது அல்லது பேசும்போது வெளியேறும் நீர்த்துளிகள் மூலம் இது மற்றவர்களுக்கும் பரவக்கூடும்.

பொதுவாகக் காணப்படும் அறிகுறிகள்

திடீரென ஏற்படும் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், தலைவலி, உடல் வலி, அதிக சோர்வு, பசியின்மை போன்ற அறிகுறிகள் இருக்கும் என கூறப்படுகிறது. சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம். குறிப்பாக குழந்தைகளிடம் வயிறு தொடர்பான அறிகுறிகள் அதிகமாக காணப்படலாம். தொடர்ந்து வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடலில் நீரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சிறுநீர் குறைவது, வாய் உலர்வது, அதிக தாகம், மயக்கம் மற்றும் கடுமையான சோர்வு போன்றவை நீரிழப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்.

சுயமாக மருந்து உட்கொள்ள வேண்டாம்

காய்ச்சல், இருமல், தொண்டை வலி அல்லது பசியின்மை போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவற்றை சாதாரண காய்ச்சல் என அலட்சியப்படுத்த வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக மருந்தகங்களில் தாங்களாகவே மருந்துகளை வாங்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அறிகுறிகள் நீடித்தால் அருகிலுள்ள மருத்துவமனை அல்லது அரசு சுகாதார மையத்தை அணுகி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிவது, கைகளை சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்வது போன்ற நடவடிக்கைகளைப் பின்பற்றலாம். அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் உரிய நேரத்தில் மருத்துவ உதவியை நாடுவதும், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதும் முக்கியமாகும்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
RELATED ARTICLES

Most Popular