2026 தமிழக சட்டசபை தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சி அமைத்தது.
விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே, அவரை வருங்கால பிரதமர் என அவரது கட்சியை சேர்ந்தவர்கள் பேச தொடங்கினர். இதற்கு முன்னதாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும், தென் மாநிலத்தில் இருந்து ஒருவர் பிரதமராக வர வேண்டும் என்றும், அந்த வாய்ப்பு தமிழகத்தைச் சேர்ந்த தலைவருக்கு கிடைக்க வேண்டும் என பேசியிருந்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், த.வெ.க.வினரின் இந்த அணுகுமுறையை விமர்சித்துள்ளார். மேலும், ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்ற நிலைப்பாட்டையும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், 2029-ம் ஆண்டு பொது தேர்தலின்போது, மக்களின் பிரதமர் தேர்வாக யார் இருப்பார்? என்று இந்தியா டுடே மற்றும் சி-வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில், நரேந்திர மோடி 48.7 சதவீதம், ராகுல் காந்தி 27.1 சதவீதம், ஜோசப் விஜய் 9.2 சதவீதம், என முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.
