நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2,400-க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளனர். சுமார் 2,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாளத்தின் போடேகோஷி நதியில் கடந்த 26-ந்தேதி காலையில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் பல நகரங்கள் மற்றும் கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வீடுகள், வாகனங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இந்த பேரிடரில் இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2,400-க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளனர். சுமார் 2,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட புதன்கிழமை முதல் இந்தியா, நேபாளத்திற்கு தொடர்ந்து நிவாரண உதவிகளை அனுப்பி வருகிறது. இதுவரை 57.6 டன் நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
காத்மாண்டு அரசின் கோரிக்கையைத் தொடர்ந்து, மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுரங்க மீட்புப் பணியில் அனுபவம் கொண்டவர்கள் அடங்கிய 11 பேர் கொண்ட இந்தியக் குழுவும் நேபாளம் சென்றுள்ளது.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக நேபாளம் முழுவதும் 11,000-க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் 5,000-க்கும் மேற்பட்டோர் நேபாள ராணுவத்தைச் சேர்ந்தவர்கள். பல பகுதிகளில் இடையிடையே மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டாலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
