LPG சிலிண்டர் விலை, வங்கி FD வட்டி, ATM கட்டணம், கார் விலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் செப்டம்பர் 1 முதல் புதிய விதிகள் அமலாக உள்ளன.
ETF-களுக்கான விலை வரம்பு
ETF-களுக்கான விலை வரம்பு நிர்ணயிக்கும் முறை மாற்றப்படுகிறது. முந்தைய வர்த்தக நாளின் கடைசி 30 நிமிடங்களில் பதிவான வர்த்தக அளவுகளை அடிப்படையாகக் கொண்டு சராசரி விலை கணக்கிடப்படும். இதன் மூலம் ETF வர்த்தக விலையை தற்போதைய சந்தை நிலவரத்துக்கு மேலும் நெருக்கமாக கொண்டு வருவதே நோக்கம். குறிப்பாக தங்கம் மற்றும் வெள்ளி சார்ந்த ETF முதலீட்டாளர்கள் இந்த மாற்றத்தை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
LPG சிலிண்டர்
ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் எரிவாயு விலைகளை மறுஆய்வு செய்கின்றன. அதன்படி, செப்டம்பர் 1 அன்று LPG சிலிண்டர் விலையில் மாற்றம் அறிவிக்கப்படலாம். கடந்த ஆகஸ்ட் 1 அன்று 19 கிலோ வணிக பயன்பாட்டு LPG சிலிண்டரின் விலை ரூ.202 குறைக்கப்பட்டது. அதே நேரத்தில், 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
செப்டம்பர் மாதத்திற்கான புதிய விலை அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், அது குடும்பங்களின் சமையல் செலவிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
LPG e-KYC செய்ய அவகாசம்
LPG இணைப்பு வைத்திருப்பவர்கள் e-KYC சரிபார்ப்பை முடிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்பு ஆகஸ்ட் 23 வரை இருந்த காலக்கெடு, தற்போது ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 31-க்குள் e-KYC செயல்முறையை நிறைவு செய்யாதவர்களுக்கு செப்டம்பர் 1 முதல் சிலிண்டர் வாங்குவதில் கூடுதல் செலவு ஏற்படலாம். எனவே, இந்த காலக்கெடுவுக்குள் சரிபார்ப்பை முடித்துக் கொள்வது முக்கியம்.
வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய நடைமுறை
சர்வதேச பயணிகளுக்கான குடியேற்றச் சோதனை நடைமுறையிலும் செப்டம்பர் 1 முதல் மாற்றம் வர உள்ளது. இதுவரை போர்டிங் பாஸ்களில் முத்திரையிடும் நடைமுறை இருந்த நிலையில், இனி பயணிகள் மொபைல் போனில் உள்ள மின்னணு போர்டிங் பாஸ் அல்லது அதன் அச்சு நகலைக் காட்டி குடியேற்றச் சோதனையை மேற்கொள்ள முடியும்.
டாடா மற்றும் ஹூண்டாய் கார்கள் விலை உயர்வு
செப்டம்பர் 1 முதல் டாடா கார்களின் விலை உயர வாய்ப்பு உள்ளது. இந்த விலை உயர்வு அதிகபட்சமாக ரூ.25,000 வரை இருக்கும். பெட்ரோல் மற்றும் மின்சார வாகனங்கள் இரண்டிற்கும் இது பொருந்தும். இதேபோல், ஹூண்டாய் மோட்டார் இந்தியாவும் செப்டம்பர் 1 முதல் கார் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
FD வட்டி விகிதங்களில் மாற்றம்
வங்கி நிலையான வைப்புத்தொகை திட்டமான FD-க்கான வட்டி விகிதங்களிலும் செப்டம்பர் 1 முதல் மாற்றம் ஏற்படலாம். வட்டி குறைக்கப்பட்டால் FD முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் வருமானம் குறைய வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் வட்டி உயர்ந்தால் முதலீட்டாளர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும். FD-யில் புதிய முதலீடு செய்யத் திட்டமிடுபவர்கள், செப்டம்பர் 1 அன்று வங்கிகள் வெளியிடும் புதிய வட்டி விகிதங்களை கவனிப்பது முக்கியம்.
ATM பரிவர்த்தனை கட்டணத்தில் மாற்றம்
ATM சேவைகளுக்கான கட்டண விதிமுறைகளிலும் செப்டம்பர் மாதம் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அதிக எண்ணிக்கையில் ATM பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு கட்டண மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஒவ்வொரு வங்கியும் அறிவிக்கும் புதிய கட்டண விவரங்களை வாடிக்கையாளர்கள் கவனமாக சரிபார்த்துக் கொள்வது அவசியம்.
