உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் பரபரப்பான மேம்பாலத்தில் சிக்கித் தவித்த பசுவை, தனது பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் சாலையோரத்துக்கு அழைத்துச் சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
காசியாபாத்தில் உள்ள பரபரப்பான மேம்பாலம் ஒன்றில் பசு ஒன்று சாலையின் நடுப்பகுதியில் சிக்கியிருந்தது. அந்தப் பகுதியில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் வேகமாக சென்று கொண்டிருந்ததால், பசுவுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் நிலவியது.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் தனது வாகனத்தை நிறுத்தி பசுவுக்கு உதவினார். பசுவுக்கு அருகில் மெதுவாக இருசக்கர வாகனத்தை ஓட்டிய அந்த நபர், அதனுடன் இணையாகச் சென்று சாலையின் ஓரப்பகுதியை நோக்கி அதை நகர்த்தினார்.
இறுதியில் பசு பாதுகாப்பாக சாலையோரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து அந்த இருசக்கர வாகன ஓட்டி அங்கிருந்து சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஆபத்தான போக்குவரத்துக்கு இடையிலும் வாகனத்தை நிறுத்தி, உதவியற்ற நிலையில் இருந்த பசுவை பாதுகாப்பாக அழைத்துச் சென்ற இளைஞரின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
