இன்றைய வாழ்க்கை முறையில் இரவு நேரம் தாமதமாக தூங்கி, அதிகாலையிலேயே எழுவது பலருக்கும் வழக்கமாகிவிட்டது. ஆனால் தொடர்ந்து போதுமான நேரம் தூங்காமல் இருப்பது சோர்வு மட்டுமின்றி உடல் மற்றும் மனநல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
பெரியவர்கள் பொதுவாக தினமும் 7 முதல் 9 மணி நேரம் தூங்குவது அவசியம். சில நாட்கள் குறைவாக தூங்குவதால் பெரிய பாதிப்பு ஏற்படாமல் இருக்கலாம். ஆனால் தொடர்ந்து பல வாரங்கள் தூக்க நேரம் குறைந்தால் உடலின் இயல்பான செயல்பாடுகளும், மூளையின் செயல்பாடுகளும் பாதிக்கப்படலாம்.
தொடர்ச்சியாக தூங்காமல் இருப்பது மனநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். கண்களில் எரிச்சல், மன அழுத்தம், பதற்றம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக தூங்காமல் இருப்பது உடல் எடை அதிகரிப்பு, ரத்தச் சர்க்கரை அளவில் மாற்றங்கள் மற்றும் இதய-ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். இருப்பினும் தூக்கக் குறைபாடு மட்டுமே இந்தப் பிரச்சினைகளுக்கு நேரடி காரணம் என்று கூற முடியாது. உணவு முறை, உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணிகளும் இதில் பங்கு வகிக்கின்றன.
நல்ல தூக்கத்துக்கு என்ன செய்யலாம்?
தினமும் ஒரே நேரத்தில் தூங்கச் செல்லுங்கள். படுக்கைக்கு முன் செல்போன் பயன்பாட்டை குறைக்கவும். இரவு நேரத்தில் நீண்ட நேரம் திரையைப் பார்ப்பதை தவிர்ப்பது நல்ல தூக்கத்துக்கு உதவும். தினசரி நடைப்பயிற்சி உள்ளிட்ட உடற்பயிற்சிகள் இரவு தூக்கத்தை மேம்படுத்த உதவலாம்.
அமைதியான, இருள் நிறைந்த, குளிர்ச்சியான சூழல் தூக்கம் வருவதற்கு உதவக்கூடும். வெதுவெதுப்பான பால் அருந்துவது, குளிப்பது அல்லது அமைதியான இசையைக் கேட்பது போன்ற பழக்கங்கள் உடலையும் மனதையும் தூக்கத்துக்கு தயார்படுத்த உதவும்.
படுக்கைக்குச் செல்வதற்கு 2 முதல் 3 மணி நேரத்துக்குள் அதிக அளவு உணவு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. தூங்குவதற்கு முன்பு பசி இருந்தால் சிறிய அளவிலான ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ளலாம்.
மாலை நேரத்துக்குப் பிறகு காபி மற்றும் காபின் கலந்த பானங்களை தவிர்ப்பதும் தூக்கத்துக்கு உதவும். அதிக கொழுப்பு அல்லது அதிக காரமான உணவுகள் சிலருக்கு நெஞ்செரிச்சலை ஏற்படுத்தி தூக்கத்தை பாதிக்கலாம். மெதுவாக ஆழமாக மூச்சை இழுத்து வெளியேற்றும் சுவாசப் பயிற்சிகள் போன்ற தளர்வு முறைகளையும் முயற்சி செய்யலாம். தொடர்ந்து பிரச்சனை இருந்தால் மருத்துவரை அணுகுங்கள்
சில நாட்கள் மட்டும் குறைவாக தூங்குவது பெரிய பிரச்சினையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் பல வாரங்களாக தூக்கக் குறைபாடு தொடர்வது, அதிகாலையில் அடிக்கடி விழித்துக் கொள்வது, பகலில் அதிக சோர்வு அல்லது கவனம் குறைவது போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.
