ஃபிரிட்ஜைச் சுற்றி எப்போதும் காற்றோட்டம் இருக்க வேண்டும். அதன் மேற்பகுதியை சேமிப்பு இடமாகப் பயன்படுத்தாமல் காலியாக வைத்திருப்பது நல்லது. குறிப்பாக வெப்பத்தால் பாதிக்கக்கூடிய பொருட்கள், உடையக்கூடிய பொருட்கள், மருந்துகள், ரசாயனப் பொருட்கள் மற்றும் மின்சாதனங்களை அங்கு வைக்காமல் இருப்பது நல்லது.
ஃபிரிட்ஜின் மேல் ஏன் பொருட்களை வைக்கக்கூடாது?
குளிர்சாதனப் பெட்டி இயங்கும்போது உருவாகும் அதிகப்படியான வெப்பம் அதன் மேல் மற்றும் பக்கவாட்டுப் பகுதிகளில் வெளியேறுகிறது. இதனால், மேற்பகுதி சாதாரண அறை வெப்பநிலையைவிட சூடாக இருக்கக்கூடும். எனவே, இது மேல் வைக்கப்படும் பொருட்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். அதன் மேல் அதிக பொருட்களை வைப்பது வெப்ப வெளியேற்றத்தை பாதித்து, மின்சாரப் பயன்பாட்டை அதிகரிக்கக்கூடும்.
இதையும் படிங்க : சிப்ஸ் பாக்கெட்டில் இருக்கும் காற்று நம்மை ஏமாற்றுவதற்கா? – உண்மை என்ன?
கண்ணாடி மற்றும் உடையக்கூடிய பொருட்கள்
கண்ணாடி பாட்டில்கள், கண்ணாடிப் பாத்திரங்கள் போன்ற எளிதில் உடையக்கூடிய பொருட்களை ஃபிரிட்ஜின் மேல் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஃபிரிட்ஜின் கதவைத் திறக்கும்போது ஏற்படும் அதிர்வு காரணமாக பொருட்கள் கீழே விழுந்து உடையும் அபாயம் உள்ளது.
காய்கறிகள் மற்றும் பழங்கள்
உருளைக்கிழங்கு, பூண்டு, வாழைப்பழம் உள்ளிட்ட சில பொருட்கள் ஃபிரிட்ஜின் உள்ளே வைக்க கூடாது. அதேபோல், அவற்றை ஃபிரிட்ஜின் மேல் வைக்கக்கூடாது. இதனால் அவை வேகமாக கெட்டுப்போகும் வாய்ப்பு உள்ளது.
மருந்துகளை வைக்க வேண்டாம்
மருந்துகளை ஃபிரிட்ஜின் மேல் வைப்பதை தவிர்க்க வேண்டும். ஃபிரிட்ஜில் இருந்து வெளியேறும் வெப்பம் சில மருந்துகளின் தன்மையைப் பாதிக்கக்கூடும். மருந்துகளின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம்.
இதையும் படிங்க : இளம் வயதிலேயே முதுமையான தோற்றமா? இந்த 5 உணவுகளை அளவாக சாப்பிடுங்கள்
மிக்ஸி, ஜூஸர் போன்ற மின்சாதனங்கள்
இடப்பற்றாக்குறை காரணமாக மிக்ஸி, ஜூஸர், கிரைண்டர், டோஸ்டர் போன்ற சிறிய மின்சாதனங்களை சிலர் ஃபிரிட்ஜின் மேல் வைக்கின்றனர். இவ்வாறு வைப்பதால் அவற்றை எடுக்கும்போது தவறி கீழே விழும் அபாயம் இருப்பதுடன், ஃபிரிட்ஜின் காற்றோட்டத்துக்கும் இடையூறு ஏற்படலாம்.
பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள்
பிளாஸ்டிக் பெட்டிகள், அலங்காரப் பொருட்கள், செயற்கைத் தாவரங்கள் போன்றவற்றையும் ஃபிரிட்ஜின் மேல் வைப்பதைத் தவிர்ப்பது நல்லது. இயற்கைத் தாவரங்களை வைத்தால் வெப்பத்தால் அவற்றின் மண் உலர்ந்து, செடிகள் வாடக்கூடும்.
சமையல் எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்கள்
சமையல் எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்களை ஃபிரிட்ஜின் மேல் வைப்பது எண்ணெயின் தரத்தைப் பாதிக்கக்கூடும். மசாலாப் பொருட்களின் மணம் மற்றும் சுவையும் குறைய வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க : உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு கேன்சர் வருமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?
சுத்தம் செய்யும் ரசாயனப் பொருட்கள்
தரை அல்லது வீட்டைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்கள், தெளிப்பான்கள், சோப்பு பொடி போன்றவற்றையும் ஃபிரிட்ஜின் மேல் வைக்கக்கூடாது. அவை கசிந்தால் உணவுப் பொருட்கள் அல்லது ஃபிரிட்ஜின் பகுதிகளுடன் தொடர்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
