குஜராத் மாநிலம் சூரத்தில் புதிதாக திறக்கப்பட்ட மொத்த மீன் சந்திப்புக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அந்தப் பெயர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என சூரத் மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் மாநகராட்சி சார்பில் பெரிய அளவிலான மொத்த மீன் விற்பனை சந்தை அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. அந்த சந்தையின் முன்புறத்தில் “ஸ்ரீ நரேந்திர மோடி மொத்த மீன் விற்பனை மார்க்கெட்” என்ற பெயருடன் பலகை வைக்கப்பட்டிருந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் மீன் சந்தைக்கு சூட்டப்பட்ட விவகாரம் சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது.
பிரதமர் மோடி முழுமையான சைவ உணவுப் பழக்கத்தை பின்பற்றுபவர் என்றும், அவர் கடல் உணவுகளை உட்கொள்வதில்லை என்றும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், மீன் சந்தைக்கான அதிகாரப்பூர்வ பெயர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று சூரத் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சூரத் மாநகராட்சியின் மத்திய மண்டல செயல் பொறியாளர் ஆர்.டி. கஞ்சவாலா கூறுகையில், மீன் சந்தையின் பெயர் தொடர்பாக இன்னும் பரிசீலனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், பலகையை அகற்றுவதாக அவர்கள் உறுதி அளித்துள்ளதாகவும் விளக்கம் அளித்தார்.
