தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்க அலுவலகங்களில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு பொது விநியோகத் திட்ட ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பால்ராஜ், மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், திண்டுக்கல் பகுதியில் கூட்டுறவு சங்க நிர்வாகம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. கூட்டுறவு சங்க அலுவலகங்கள் மற்றும் கடைகளில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை பொருத்தபட்டது.
இந்த் புகைப்படங்கள் வாங்கப்பட்ட விலையில் சந்தேகம் இருப்பதாகவும், சந்தை மதிப்பை விட அதிகமான தொகை குறிப்பிடப்பட்டு முறைகேடு நடைபெற்றிருக்கலாம் என்றும் மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மனுவில் கூறப்பட்ட தகவலின்படி, கூட்டுறவு சங்க அலுவலகங்களுக்காக முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்கள் ரூ.800 என்ற தொகையில் வாங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்படங்களின் உண்மையான சந்தை விலை என்ன, வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு, அரசுத் தொகை அல்லது சங்க நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள விவகாரங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர், சம்பந்தப்பட்ட பகுதிகளில் தேவையான அதிகாரிகளை நியமித்து புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
