நடிகர் சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய ‘கருப்பு’ திரைப்படம் திரையரங்குகளில் 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி நடிகர் சூர்யாவும், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் கடந்த மே 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம், ரூ.350 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ‘கருப்பு’ திரைப்படம் திரையரங்குகளில் 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. இதனை முன்னிட்டு ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, படத்தின் வெற்றியை கொண்டாடியுள்ளது.
100-வது நாள் நிறைவையொட்டி நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ‘கருப்பு’ படத்தை தங்களுடைய படமாக ஏற்றுக்கொண்டு கொண்டாடிய ரசிகர்களுக்கே இந்த வெற்றி முழுவதும் உரியது என அவர் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் கோடான கோடி நன்றிகள் என்றும் தெரிவித்துள்ளார்.
‘கருப்பு’ படத்தை இயக்கியதுடன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ள ஆர்.ஜே. பாலாஜியும் 100-வது நாள் நிறைவை ஒட்டி தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
வெவ்வேறு நம்பிக்கைகள், கலாச்சாரங்கள் மற்றும் தலைமுறைகளைச் சேர்ந்த மக்களின் மனதில் ‘கருப்பு’ திரைப்படம் இடம்பிடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது ஒரு தலைமுறைக்கான மிகப்பெரிய வெற்றி என்றும், படத்திற்கு கிடைத்த வரவேற்பும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
