கேரளாவில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய தெருநாய்களை கருணைக் கொலை செய்யும் நடைமுறைக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தெருநாய்களை வெறுமனே பொதுமக்களின் புகார் அடிப்படையில் கருணைக் கொலை செய்ய முடியாது என்பது இந்த நடைமுறையின் முக்கிய அம்சமாகும். ஒரு நாயின் உடல்நிலை மற்றும் நடத்தை குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வெறிநோய் பாதிப்பு, குணப்படுத்த முடியாத நோய் அல்லது மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் காரணங்கள் உள்ளதா என பரிசோதிக்கப்படும்.
அனைத்து தெருநாய்களையும் அழிக்கும் நடவடிக்கையாக இல்லாமல், மிகவும் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே கருணைக் கொலை செய்யப்பட வேண்டும் என்பதற்காக கண்காணிப்பு, பதிவு, வெளிப்படைத்தன்மை மற்றும் தத்தெடுக்கும் வாய்ப்பு போன்ற பல கட்டுப்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
