காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த புதிய விமான நிலையத் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டுள்ளது. விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத மாற்று இடத்தை தேர்வு செய்து புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கைகள் தொடரப்படாது என்று அறிவித்தார்.
சென்னை மாநகரத்தின் வளர்ச்சி, அதிகரித்து வரும் விமானப் பயணிகள், சரக்கு போக்குவரத்து மற்றும் தொழில் வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு புதிய விமான நிலையம் அவசியம் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். அதே நேரத்தில், புதிய திட்டம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையிலும், குடியிருப்புகளை அகற்ற வேண்டிய நிலை ஏற்படாத வகையிலும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டாலும், விமானப் பயணிகளின் எதிர்கால தேவையை சமாளிக்க சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.
தற்போது சென்னை விமான நிலையம் ஆண்டுக்கு சுமார் 30 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டுள்ளது. இதனுடன், விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்தால், சென்னை விமான நிலையத்தின் மொத்த பயணிகள் கையாளும் திறன் ஆண்டுக்கு 55 மில்லியனாக உயரும் என அரசு தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. திட்டத்துக்காக மொத்தம் 5,746.18 ஏக்கர் நிலம் தேவைப்படும் என கணக்கிடப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகளும் தொடங்கப்பட்டன.
நிலம் வழங்கும் மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக ரூ.1,822.45 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு, தண்டலம் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த பகுதிகளில் இருந்து நிலங்களைப் பெற்று விமான நிலையம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அணுகுசாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.
பரந்தூரை விமான நிலையத்துக்கான இடமாக தேர்வு செய்ததில் தொடக்கத்திலிருந்தே பல கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், தங்கள் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்ற அச்சத்தை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்கு எதிரான போராட்டம் சுமார் ஆயிரம் நாட்களுக்கும் மேலாக நீடித்தது. ஏகனாபுரம் கிராமத்தில் மட்டும் சுமார் 920 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்பட்டது.
திட்டத்துக்காக ஏற்கெனவே நிலம் கையகப்படுத்தப்பட்ட பகுதிகளின் எதிர்காலம் குறித்தும் தற்போது கேள்விகள் எழுந்துள்ளன. நிலத்துக்கான இழப்பீடு பெற்ற சிலர், தேவைப்பட்டால் பெற்ற தொகையை அரசிடம் திருப்பித் தரத் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, திட்டத்துக்காக எவ்வளவு நிலம் கையகப்படுத்தப்பட்டது என்பது தொடர்பாகவும் அரசியல் தரப்புகளில் மாறுபட்ட தகவல்கள் வெளியாகின. பரந்தூரைச் சுற்றிய பகுதிகளில் சுமார் 1,300 ஏக்கர் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தண்டலம் ஊராட்சி மன்றத் தலைவர் சுரேஷ்பாபு கூறியிருந்தார்.
பரந்தூரில் சர்வதேச பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்துக்கு மத்திய அரசு கடந்த 2025 ஏப்ரல் 7-ஆம் தேதி கொள்கைரீதியான ஒப்புதல் வழங்கியிருந்தது. பின்னர் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
திட்டத்தின் முதல் கட்டத்துக்கான மதிப்பீட்டுச் செலவு சுமார் ரூ.10,500 கோடி என முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட பணிகள் மாநில அரசு அல்லது திட்டத்தை செயல்படுத்தும் அமைப்பின் பொறுப்பில் இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
பரந்தூர் திட்டம் அதிகாரப்பூர்வமாக கைவிடப்பட்டுள்ள நிலையில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் எந்தப் பகுதியில் அமையும் என்பது தற்போது முக்கியமான கேள்வியாகியுள்ளது. புதிய இடம் தேர்வு செய்யப்பட்ட பிறகு தொழில்நுட்ப ஆய்வு, மத்திய அரசின் அனுமதி மற்றும் பிற நடைமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும்.
அதுவரை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கி அதிகரித்து வரும் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து தேவையை சமாளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. பரந்தூர் மக்களின் நீண்ட போராட்டத்துக்கு தீர்வு கிடைத்துள்ள நிலையில், சென்னைக்கான புதிய விமான நிலையத்தின் அடுத்த கட்ட திட்டம் எந்த திசையில் நகரும் என்பது முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
